×

சீட்டுக்காக மஞ்சளுக்கு மாறிய மாஜி எம்.பி.

‘‘அம்மா மரணத்தில் மர்மம் என்று யார் பேசினாலும் நாக்கை அறுப்பேன்’’ என்று கூறி, 2016ல் பரபரப்பை ஏற்படுத்தியவர் முட்டைக்கு பேமசான நாமக்கல்லின் முன்னாள் எம்பி சுந்தரம். கலைஞர் கருணாநிதி பெயரில் போலி வாக்காளர் அட்டை வெளியிட்டது, பொதுமக்கள் மத்தியில் ஜெயலலிதாவின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தது, பண்ணாரி கோயிலில் தீ மிதித்தது என்று எப்போதும் சர்ச்சைகளை தோளில் தூக்கி சுமப்பவர்தான் சுந்தரம். அதே ரீதியில் தற்போது மஞ்சத்துண்டு போட்டு, காலில் செருப்பணியாமல் வலம் வருகிறார் இந்த மாஜி. ஏன் இந்த திடீர் மாற்றம் என்று கேட்பவர்களிடம் அடிப்பொடிகள் இப்படி உதார் விடுறாங்களாம்.

‘‘அண்ணன் எப்பவுமே மத்தவங்களை விட, வித்தியாசமானவரு. அம்மா ஆட்சி அமைவதற்காக எந்த நேரமும் உழைப்பவரு. அந்தவகையில் தற்போது வரும் தேர்தலிலும் மீண்டும் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய பிரார்த்தனைகளை நடத்திட்டு இருக்காரு. சமீபத்தில் இதுக்காக மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு போயிட்டு வந்தாரு. ஆனால் வந்த பிறகும் மாலையை கழற்றவில்லை. செருப்பும் அணிவதில்லை. மஞ்ச வேட்டியை கட்டிக்கிட்டு, மஞ்ச துண்டு போட்டுக்கிட்டு தொடர்ந்து விரதம் இருக்கிறாரு. அவரது பிரார்த்தனைக்கான பலனை சாமிங்க குடுக்கும்,’’ என்பது தான் அந்த உதார். அதுசரி திருச்செங்கோடு தொகுதிக்கு குறிவச்சு தான், இந்த மஞ்சள் யூனிபார்மா? என்றால் ‘‘வேண்டுவது அண்ணனின் கடமை. அதற்கான பலனை கொடுத்தால் இபிஎஸ்சுக்கும், ஓபிஎஸ்சுக்கும் பெருமை,’’ என்று பல்டி அடிக்கிறாங்களாம் ஆதரவாளர்கள். பக்தி பழம் கனிந்து திருச்செங்கோடு தொகுதியில் விழுமா? என்பது இன்னும் பத்துநாளில் தெரிஞ்சிடும் என்பது எதிர்கோஷ்டிகளின் நக்கல்.

நாங்கல்லாம் தேர்தல் காலத்து கருவேப்பிலை...
தேர்தல் காலம் என்றாலே ஊர்க்காவல்படையின் பங்கு அபரிதமானது. போலீசாருடன் சேர்ந்து, சட்டம் ஒழுங்கு, குற்றம் கண்காணிப்பு, போக்குவரத்து சீர்செய்வதோடு, ஒவ்வொரு முக்கிய திருவிழா பாதுகாப்பிலும், விஐபிகள் வருகையின்போதும் இவர்கள் இருப்பார்கள். ஏற்கனவே தமிழகத்தில் 16,500 பேர் உள்ள நிலையில், புதிதாக எடுக்கப்பட்ட 3,600 பேர் என சுமார் 20 ஆயிரம் பேர் இதில் இருக்கின்றனர். 2018ல் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, 8 மணிநேர பணி, தினச் சம்பளம் ₹560, மாதம் 30 நாட்களும் வேலை தர உத்தரவு இருந்தும், மாதம் வெறும் ஐந்து நாட்களே பணி தரப்படுகிறது.

எப்போதும் அழைக்கலாம் என்பதால், தனியார் கம்பெனி வேலைக்கும் இவர்கள் செல்ல முடியவில்லை. இவர்கள் கேட்பதெல்லாம், ‘‘சமீபத்திய கொரோனா காலத்தில் பல இடங்களில் 30 நாட்களும் பணி கிடைத்தது. இப்போதோ, 5 நாட்கள் பணி கிடைப்பதே கடினம். மதுரை ஊர்க்காவல்படையில் 22ம் தேதியாகியும், இந்த ஐந்து நாட்கள் பணியும் இதுவரை தரவில்லை. கொரோனா மற்றும் ஒவ்வொரு தேர்தல் காலங்களில் மட்டும் கருவேப்பிலையாக பயன்படுத்திவிட்டு வீசி எறிந்து விடுகிறார்கள்’’ என்கின்றனர்.

Tags : Magi M. , Former MP who turned yellow for the ace.
× RELATED சிவசேனா, தேசியவாத காங்கிரசை போல்...